search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் சவர தொழிலாளர்கள் ஸ்டிரைக்"

    ஆந்திராவில் கோவில்களில் பணியாற்றும் சவர தொழிலாளர்கள் இன்று திடீரென ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். #TempleBarbersStrike
    ஐதராபாத்:

    ஆந்திராவில் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் பணம், நகைகள் என பல்வேறு வகையில் காணிக்கை செலுத்துகின்றனர். சிலர் தலைமுடியையும் காணிக்கை செலுத்துகின்றனர். இந்த பக்தர்களுக்கு மொட்டை அடிப்பதற்காக கோவில்களில் சவரத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். 

    இவ்வாறு ஆந்திர மாநிலத்தில் உள்ள கோவில்களில் மொட்டை போடும் பணியில் ஈடுபட்டுள்ள சவரத் தொழிலாளர்கள் தங்களுக்கு நிலையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

    இதனால் கோவில்களில் பணியாற்றும் சவரத் தொழிலாளர்கள் இன்று திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலையான ஊதியம், பணி பாதுகாப்பு கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால், முடி காணிக்கை செலுத்த வந்த பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். வேண்டுதலை நிறைவேற்ற முடியாத அதிருப்தியுடன் கோவில்களில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். 

    பிஎப் மற்றும் பென்சனுடன் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என கடந்த சில தினங்களாகவே சவர தொழிலாளர்கள் வலியுறுத்தி வந்தனர். தற்போது, ஒரு தலைக்கு 13 ரூபாய் என்ற அளவில் சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் பல நாட்கள் போதிய வருவாய் இன்றி குடும்பத்தை நடத்த முடியவில்லை என்பதால் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க கோரி போராட்டம் நடத்தினர்.

    ஆனால், மிக அதிக அளவில் பக்தர்கள் வருகை தரும் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் சவரத் தொழிலாளர்கள் யாரும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஏழுமலையான் கோவிலில் உள்ள கல்யாண கட்டாவில் (முடி காணிக்கை செலுத்துமிடம்) மட்டும் 500 நிரந்தர தொழிலாளர்கள், 100 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். #TempleBarbersStrike
    ×